Ads

திங்கள், 23 ஜனவரி, 2012

மனிதா! உன்னை புரிந்துகொள்!

பிறவிக் கிடைப்பது மிகப் பெரும் பாக்கியமாகும். அதிலும் மனிதராய்ப் பிறப்பது மகத்தான அருட்கொடையாகும். ஏக இறைவனின் உள்ளமையையும், வல்லமையையும் பறைசாற்றும் அற்புத அத்தாட்சிகளில் ஒன்றாக மனித இனம் விளங்குகிறது.

எந்த ஒரு பொருளுமாக இல்லாதிருந்த நிலையிலிருந்து மனிதன் என்ற உள்ளமைக்கு அல்லாஹ் படைத்தான்.

படைத்ததோடு தனது கடமை முடிந்து விட்டதாய் கருதாமல், மனித இனம் சிந்திக்கவும் செயல்படவும் அறிவையும், ஆற்றலையும் தந்தான்.

அந்த அறிவையும், ஆற்றலையும் மனித இனம் தன் மனம்போன போக்கில் பயன்படுத்துமேயானால், அவை நஷ்டத்துக்கு ஆளாகிவிடும் என்று மகத்தான தன் கருணையால் தன்புறத்திலிருந்து பிரகாசமான வேதத்தையும் உயர்மிகு திருத்தூதர்களின் ஞான உபதேசங்களையும் தந்து அவற்றைக் கொண்டு செயல்பட அழைக்கிறான்.

விரைவாக முன்னேற வேண்டுமென்ற உந்துதலுக்கும், பேராசைக்கும் ஆட்படும் மனிதனோ நறுமணமிக்க மார்க்கத்தின் எந்த வாசனையையும் எடுத்துக் கொள்ள தயாரில்லை.
மனிதன் தயங்குகிறான். இவ்வுலக வாழ்வை மட்டும் நோக்கமாகக் கொண்ட மலிவான கொள்கைகளின், வியாபாரங்களின் கவர்ச்சி வலைகளில் சிக்கி மயங்குகிறான். மதிகெட்டு தன் வாழ்வை நாசப்படுத்திக் கொள்கிறான்.அவற்றை வென்றெடுக்கும் ஆயுதமாக வல்ல நாயன் அல்லாஹ் வளம் பொருந்திய ஈமானை அருட் செய்திருக்க அதைப் பயன்படுத்தவும், பட்டைத் தீட்டவும் செய்யாமல் தவறான சிந்தனைகளாலும், காரியங்களாலும் தரம்தாழ்ந்த மனிதர்களின் தொடர்புகளாலும் மனிதன் சத்தியத்தை மறந்து மதிமயங்கி போய் விடுகிறான். அத்தகைய மதிமயக்கத்திலிருந்து மனித சமூகத்தை விடுவித்து உண்மையின்பால் உறுதியாகிட திருமறையும், திருநபி வாழ்வியலும் வழிகாட்டுகின்றன.

அவற்றிலிருந்து சில முத்துக்களை மனித சமூகத்தின் சிந்தனைக்கு விருந்தாக்குகிறோம்.

தான் யார்? தன்னைப் படைத்தது யார்? தான் எதனால் படைக்கப்பட்டிருக்கிறோம்? தனது தன்மைகள் என்ன? தனது வாழ்வை வணக்கங்களால் எப்படி அலங்கரித்துக் கொள்வது? தனக்குண்டான கடமையும், பொறுப்பும் என்னென்ன? என்பன போன்ற அடிப்படை கேள்விகளுக்கு அல்லாஹ்வின் மார்க்கம் தரும் விழிப்புணர்வைக் கொண்டு உண்மையான இம்மை மறுமை முன்னேற்றங்களைப் பெறும் வழிமுறைகளைப்பற்றி மனித இனம் ஒரு கணம் சிந்திக்க வேண்டுகிறோம்.
மனிதன் தன்னைப்பற்றி முதலில் சிந்திக்கட்டும்

முன்னர் எந்தப் பொருளாகவும் இல்லாதிருந்த நிலையில் அவனைப் படைத்தோம் என்பதை மனிதன் சிந்திக்க வேண்டாமா? (அல்குர்ஆன் 19:67)

மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதைச் சிந்திக்கட்டும். (அல்குர்ஆன் 86:5)

முதல் மனிதர் மண்ணால் படைக்கப்பட்டார்

களிமண்ணின் சத்திலிருந்து மனிதனைப் படைத்தோம் (அல்குர்ஆன் 23:12)

மனிதனின் படைப்பைக் களிமண்ணிலிருந்து துவக்கினான். (அல்குர்ஆன் 32:7)

பின்பு விந்திலிருந்து படைக்கப்பட்டான்

மனிதனை விந்துத் துளியால் அவன் படைத்தான் (அல்குர்ஆன் 16:4)

மனிதனை விந்திலிருந்து படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா?... (அல்குர்ஆன் 36:77)

கர்ப்பப்பையில் சுமக்கப்பட்டான்
(மனிதனை) அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள்.(அல்குர்ஆன் 31:14)

மனிதர்களில் ஆண்களையும் பெண்களையும் படைத்தான்!

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்;(குழந்தை)களை வழங்குகிறான். அல்லது ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்;. ஆற்றலுடையவன். (அல்குர்ஆன் 42:49,50)


கண்ணையும், நாவையும் தந்தவன் இறைவன் அவனுக்கு இரண்டு கண்களையும், நாவையும், இரு உதடுகளையும் நாம் அமைக்கவில்லையா? ( 90:8,9)


மனிதன் அழகான அமைப்பில் படைக்கப்பட்டான்

மனிதனை அழகிய வடிவில் படைத்தோம்.(அல்குர்ஆன் 95:4)

அறிவைத் தந்தவன் இறைவன்

மனிதனைப் படைத்தான். விளங்கும்(அறிவை) திறனை அவனுக்குக் கற்றுக் கொடுத்தான். (அல்குர்ஆன் 55:3,4)


மனிதன் இறைவனை வணங்கியாக வேண்டும்

ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 51:56)


மனிதனின் பிடரி நரம்பை விட நெருக்கமானவன் இறைவன்

மனிதனை படைத்தோம். அவனது மனம் எதை எண்ணுகிறது என்பதையும் அறிவோம். நாம் அவனுக்கு பிடரி நரம்பை விட மிகவும் நெருக்கமாக இருக்கிறோம். (50:16)


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிவாளி தன் மனதை கணக்குக் கேட்டும், மரணத்திற்கு பின்னுள்ள வாழ்விற்காக செயல்பட்டும் வருகிறானோ, அவனேயாவான். பலவீனமானவன் யார் என்றால் தன் மனத்திற்கு அதன் இச்சைகளைத் தொடர்ந்து (மனதின் இச்சைகளுக்கேற்பச் செயல்பட்;டு) அல்லாஹ்வை ஆதரவு வைக்கிறானோ அவனேயாவான்;. (அபூயஃலா ஷத்தாது பின் அவுஸ்(ரலி)நூல்: திர்மிதி)


மனிதன் பொருளையே விரும்புகிறான்

அவன் செல்வத்தைக் கடுமையாக நேசிக்கிறான் (அல்குர்ஆன் 100:8)

மனிதன் பலவீனவனாகப் படைக்கப்பட்டுள்ளான்

அல்லாஹ் உங்களுக்கு (சட்டங்களை) எளிதாக்கவே விரும்புகிறான். (ஏனெனில்) மனிதன் பலவீனனாகப் படைக்கப்பட்டுள்ளான்.(;குர்ஆன் 4:28)


மனிதன் அவசரக்காரன்

நன்மைக்காகப் பிரார்த்திப்பது போலவே தீமைக்காகவும் மனிதன் பிரார்த்தனை செய்கிறான். மனிதன் அவசரக்காரனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 17:11)


மனிதன் பதறக் கூடியவனாகப் படைக்கப்பட்டுள்ளான். (அல்குர்ஆன் 70:19)

தர்க்கம் செய்யும் மனிதன்

மனிதர்களுக்காக இக்குர்ஆனில் ஒவ்வொரு முன் மாதிரியையும் தெளிவுபடுத்தியுள்ளோம். மனிதன் அதிகம் தர்க்கம் செய்பவனாகவுள்ளான். (அல்குர்ஆன் 18:54)


மனிதனுக்கு கஷ்டம் ஏற்பட்டால்...

மனிதனுக்கு ஏதேனும் தீங்கு ஏற்படுமானால் நம்மை அழைக்கிறான். பின்னர் நாம் அவனுக்கு நமது அருட்கொடையை வழங்கினால் 'எனது அறிவால் இது எனக்குத் தரப்பட்டது எனக் கூறுகிறான். அவ்வாறல்ல! அது ஒரு சோதனை! எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள். (அல்குர்ஆன் 36:49)

 மனிதனை அவனது இறைவன் மரியாதையுடன் வாழச் செய்து இன்பத்தையும் வழங்கி சோதிக்கும் போது 'என் இறைவன் என்னைக் கண்ணியமாக நடத்தினான் என்று கூறுகிறான். அவனது செல்வத்தை அளவுடன் வழங்கி சோதிக்கும் போது 'என் இறைவன் என்னை அவமானப் படுத்திவிட்டான் எனக் கூறுகிறான்.(அல்குர்ஆன் 89:15,16)


நன்றி கெட்ட மனிதன்

மனிதனுக்குத் தீங்கு ஏற்படுமானால் படுத்தவனாகவோ, அமர்ந்தவனாகவோ, நின்றவனாகவோ நம்மிடம் பிரார்த்திக்கிறான். அவனது துன்பத்தை அவனை விட்டு நாம் நீக்கும் போது அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்காக நம்மை அழைக்காதவனைப் போல் நடக்கிறான். இவ்வாறே வரம்பு மீறியோருக்கு அவர்கள் செய்து வந்தவை அழகாக்கப்பட்டுள்ளன.(குர்ஆன் 10:12)

நீங்கள் கேட்ட ஒவ்வொன்றையும் அவன் உங்களுக்கு வழங்கினான். அல்லாஹ்வின் அருட்கொடையை நீங்கள் எண்ணினால் அதை உங்களால் எண்ண முடியாது. மனிதன் அநீதி இழைப்பவன்;. நன்றி கெட்டவன். (அல்குர்ஆன் 14:34)


மனிதன் தனக்குத் தரப்படும் உணவை சிந்திக்கட்டும்


மனிதன் தனது உணவைக் (அது எவ்வாறு பெறப்படுகிறது) கவனிக்கட்டும். (அல்குர்ஆன் 80:24)


நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீது தவக்குல் எனும் முழுப்பொறுப்புச் சாட்டும் முறையில் நீங்கள் முழுமையாகப் பொறுப்புச் சாட்டினால், பறவைகளுக்கு உணவளிப்பது போன்று அல்லாஹ் உங்களுக்கும் உணவளிப்பான். பறவை காலையில் வயிறு ஒட்டியதாகச் செல்கிறது.மாலையில் வயிறு நிரம்பித் திரும்புகிறது. (அபூஹீரைரா(ரலி) நூல்: திர்மிதி)


மனிதனுக்கு இறப்பும் உண்டு


ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே (அல்குர்ஆன் 3:185)


அவனே உங்களுக்கு உயிர் கொடுத்தான். பின்னர் உங்களை மரணிக்கச் செய்வான்.(;குர்ஆன் 22:66)


மறுமையை மறுக்கும் மனிதன்


ஆனால் அவனுக்கு(இறைவனுக்கு) முன்னால் குற்றம் செய்யவே மனிதன் நாடுகிறான். 'கியாமத் நாள் எப்போது? எனக் கேட்கிறான். (அல்குர்ஆன் 75:5,6)


நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்: ஏழு விஷயங்களுக்கு முன் நல் அமல்களைக் கொண்டு முந்திக் கொள்ளுங்கள்.


1.மறதியில் ஆழ்த்தும் வறுமை
2.அநீதி இழைக்கத் தூண்டும் செல்வம்
3.உடலில் கெடுதலை உண்டாக்கும் நோய்
4.சொல்லை பலவீனப்படுத்தி விடும் முதுமை
5.விரைந்து வரும் மரணம்
6.தஜ்ஜால் அவன் எதிர்பார்க்கப்படும் மறைவான விஷயங்களில் கெட்டவன்.
7.இறதித் தீர்ப்பு நாள்.(அது)மிக்ககடினமானதும் மிகக் கசப்பானதாகும்


(அறிவிப்பவர்;: அபூஹூரைரா(ரலி) நூல்:திர்மிதி)


நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்:நிச்சயமாக உலகம் இனிமையானதாகவும் செழிப்பானதாகவும் உள்ளது. நிச்சயமாக அல்லாஹ் உங்களை அதில் தன் பிரதிநிதியாக ஆக்கியுள்ளான் நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்று அவன் பார்க்கிறான். ஆகவே உலகை அஞ்சிக்கொள்ளுங்கள். மேலும் பெண்களை அஞ்சிக் கொள்ளுங்கள். ஏனெனில், பனூ இஸ்ராயில் கூட்டத்தினரில் முதல் முதலாகத் தோன்றிய குழப்பம் பெண்கள் விஷயத்திலேயாகும். (அறிவிப்பவர்: அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) நூல்: முஸ்லிம்)


அல்லாஹ் நம் எல்லோரையும் நேர்வழியில் வாழ்ந்து, மரணிக்கும் பாக்கியத்தை நல்குவானாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக